செவ்வாய், 18 நவம்பர், 2014

புதிய பார்வை தொடர்ச்சி

காலத்துக்குக் காலம் வாழ்க்கை மாறி வரும் போது  வாழ்க்கையின்

 காலடியில்  பிறக்கும்  சிந்தனைகள்  மாற்றமுறும் போது ,அவை  வெளிப்படும்

கலைவடிவங்களும்  மாறுகின்றன.சங்கக் கவிஞன் அகவலில்

எழுதினான்.வள்ளுவர் நீதியை சுருங்கச் சொல்ல வேண்டி செறிவான குறள்

வெண்பாவில் எழுதினார்.இளங்கோ
கானல்வரிப்பாடலையும்,ஆசிரியத்தையும்

பயன்படுத்தினார்.கம்பனும்,திருத்தக்கதேவரும் காவியத் தேவைக்கிசைய
விருத்தத்தில் பாடினார்கள்.புகழேந்தி வெண்பாவில்

எழுதினார்.அகவல்,சிந்து,கண்மணி என்று பல்வேறு ஓசை வடிவங்களிலும்

பாரதி எழுதினார்.பாரதிதாசனுக்கு விருத்தமும்,கலிவெண்பாவும்,விருப்பமான

யாப்பு வடிவங்களாக இருந்தன.

                                     ''  யாப்புடைத்த  கவிதை

                                         அணையுடைத்த  காவிரி

                                        முகிலுடைத்த   மாமழை

                                        முரட்டுத்  தோலுரித்த

                                        பலாச்சுளை''

என்று  யாப்பைத் தவிர்க்கும்போது  கவிதை தன் அனைத்துச் சக்திகளோடும்

புறப்படுவதாக ஒரு புதுக் கவிஞர் கூறுகிறார்.

திங்கள், 17 நவம்பர், 2014

புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை

இலக்கியம் என்பது தனிமனிதர்களின் சாதனைத் தொகுதிதான்.காலந்தோறும்

 கவிஞர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.தமிழ்அம்மை இப்போது

 புதுப்புது வடிவுகளில் கவிதையைப் பெற்று எடுத்துக் கொள்கிறாள் என்கிறார்

  கி.இராஜநாரயணன் அவர்கள்.தமிழன்னை தற்காலத்தில் பெற்றெடுத்த

குழந்தை புதுக்கவிதை என்னும் புதுப்பூ.பாரதி மகாகவி தான்.பாரதிதாசன்

புரட்சிக்கவி தான்.ஆனாலும் இன்று தமிழ்க்கவிதை பாரதியின்

காலகட்டத்தைத் தாண்டி,பாரதிதாசனின் யுகத்தைக் கடந்து புதியதொரு

கட்டத்தை அடைந்துள்ளது.உந்த மாற்றத்திற்குக் காரணம் கவிஞர்கள்

மட்டுமல்ல,காலமும்,,களமும் தான்.


                                            அரைத்த மாவையே

                                            குழைத்து  உருட்டி

                                            பழமைக்  கல்லின்

                                            நடுவில்  நிறுத்தி

                                            யாப்பு  உருளையால்

                                           எண்சீர்  அளவுக்கு

                                           இழுத்துத் தேய்த்து
                 
                                            உலர்ந்த உவமை

                                            மாவைத் தூவி

                                            எடுத்துச்  சிலேடை

                                            எண்ணையில்  போட

                                           ' பஃப்'    என

                                            உப்பிச் சிரித்தது அது!

                                           அதை  ஆசையாய்

                                           எடுத்து  இலையில்

                                           போடும்  வேளையில்

                                           ஒரு  புதுக்காற்று

                                          ' குப்' பென  வீசிற்று, ஓ!

                                            குனிந்து  பார்த்தேன்

                                           உடைந்த அதற்குள்

                                           ஒன்றுமே இல்லை!

                                                    புதுக்காற்றின் முன்னால் மரபு அப்பளம் போல்

நொறுங்கிப் போகிறது என்கிறார் புவியரசு.மரபிலிருந்து பெறுவதற்கு

எதுவுமில்லை என்று பேசுகிறது இந்தக் கவிதை.அதே சமயம் மரபில்

காலூன்றி புதுமையில் சிறகு விரிக்கிறோம் என்று இன்றைய கவிஞர்கள்

பேசுகிறார்கள்.