செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

செவி நுகர் கனிகள்

கவிதையைப்  பாடியவரின்  உணர்ச்சி  அனுபவமும்,அதைப்  படிப்பவரின்  உணர்ச்சி அனுபவமும்  ஏறக்குறைய  ஒன்றாகி விட்டால்  படிப்பவர் கவிதையை  அனுபவிக்கும் தகுதி  பெற்று விட்டார் என்று கருதலாம்.கவிஞன் உணர்ந்த அனுபவம் அவன்  எழுதிய   கவிதையில் பொதிந்துள்ளது.தன் அனுபவத்திற்கு ஓர் அழகிய வடிவம் தந்து அதனைப் பெற வைக்கின்றான் கவிஞன்.
                           தன் அனுபவத்தை ஒரு செய்தி போல  கூறாது  அதனையே  கவிதை  மொழியாகப்  பெயர்த்து விடுகின்றான்.கவிஞனின்  உணர்ச்சி  கவிதையில் சொற்களாகவும்,சொற் பொருளாகவும்  ஒலி நயமாகவும்  வடிவம்  கொண்டுள்ளன.இவற்றைப் பற்றுக் கோடுகளாக  கொண்டு படிப்பவர்  கவிஞனின்  அனுபவத்தைத் திரும்ப  பெற வேண்டும்.
                                   '' வான் கலந்த  மாணிக்க வாசக நின் வாசகத்தை  நான் கலந்து  பாடுங்கால்''
என்ற   இராமலிங்க அடிகளின்  வாக்கு  இதற்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.உள்ளங் கலந்து  பாடினால்  கவிஞனின் இதயம்  படிப்போரின்  இதயத்தைத் தொட்டு விடும்.சங்கப் பாடல்களில் உள்ளன போல் சொற்களும்,சொற் பொருளும்  புதியனவாக இருந்தால் தொடக்கத்தில் சிறிது  தயக்கமும்,தடுமாற்றமும் நேரிடலாம்.அவற்றை அறிந்து  இரண்டாம் முறையில்  கவிதையைப் படிக்கும் போது  கவிஞனின்  உணர்ச்சியுடன்  ஒன்றி விட முடியும்  நிலையும்  ஏற்படும்.
                                        கவிதையின் ஒலிநயம்  உணர்ச்சியால் அமைந்திருக்கும்.உணர்ச்சியை  ஒழுங்கு படுத்த,விளங்குவது.அந்நயம்  கவிஞரின்  உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்ச்சியிலிருந்து  தோன்றியது,படிப்போர்  உள்ளத்தில் சுரக்கும்  உணர்ச்சியை  ஒழுங்கு படுத்தக் கருவியாக இருப்பது.ஆகவே,ஒரு கவிதையைப் படிக்குங்கால் உணர்ச்சி ஒழுங்குபட்டவுடன் ஒலிநயம் படிப்பவர்க்கு இயல்பாகி விடுதல் வேண்டும்.ஒலி நயமும்,உணர்ச்சியும்,தாளமும்,இசையும்  போன்றவை.கவிதை  'செவி நுகர் கனி' என்று  போற்றப் படுகின்றது.ஆகவே,கவிதையின்  ஒலி நயத்தைச் செவி உணருமாறு பாடுதல்  வேண்டும்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

புதுமையின்பம்

உள்ளக் கிளர்ச்சி  பற்றிய  சில கொள்கைகள்  உள்ளத்தை  ஆராய  முற்பட்ட சில  உளவியலறிஞர்கள்  உள்ளக் கிளர்ச்சி பற்றிய  சில கொள்கைகளை  நிறுவியுள்ளனர்.இவை கவிதையனுபவத்திற்கு  ஓரளவு  துணை  புரிபவை.கவிதையனுபவம் எங்ஙனம் நம்மிடம்  உண்டாகிறது  என்பதை  அறிவதற்கு  ஓரளவு  ஊன்று கோல்களாக  இருப்பவை.
                                              பழந் தமிழர்  கண்ட  கொள்கை;  பழந்தமிழர்  உள்ளக் கிளர்ச்சிகளில் பாட்டிற்குச்  சிறந்தனவற்றை மெய்ப்பாடுகள்  என  வழங்கினர்.
                      ''  உய்ப்போன்  செய்த்து   காண்போர்க்கெய்துதல்
                        மெய்ப்  பாடென்ப   மெய்யுணர்ந்தோரே''
என்ற  செயிற்றியனார்  கூற்று  ஈண்டு  சிந்திக்கற்பாலது.
                                                   கவிதையைப்  பற்றி  எத்தனையோ அறிஞர்கள்  எத்தனையோ  விதமாக  கூறியிருக்கின்றனர்.எஸ்ரா  பவுண்ட்  என்ற  அறிஞரின்  கருத்துப் படி  இலக்கியம்  என்பது  பொருட் செறிவுடைய  சொற்கள்  நிறைந்த  கருவூலமாகும்."பேரிலக்கியம்  என்பது  உயர்ந்த எல்லைவரை  பொருளூட்டம்  பெற்ற மொழியாகும்''என்பது  அவர் கருத்து.மேலும் அவர்,உரைநடை சொற் பெருக்கு  நிறைந்த அதிகச் செய்திகளடங்கிய  சாதனம்  என்றும் ,கவிதை  என்பது   சொற் செட்டும்,உணர்ச்சிப் பெருக்கும்  நிறைந்த  சாதனம்  என்றும்  கூறிக் கவிதைக்கும்,உரை நடைக்கும்  வேற்றுமை  காட்டுகின்றார்.நம்முடைய  பவணந்தியார்  கூறியுள்ள,
                              ''பல் வகைத் தாதுவின்  உயிர்க் குடல்  போற்பல
                                சொல்லாற்  பொருட்கிட  னாக   உணர்வின்
                                 வல்லோர்  அணி பெறச்  செய்வன  செய்யுள்''
என்ற  கவிதை  பற்றிய  நூற்பாவும்  ஈண்டு  சிந்திக்கத்  தக்கது.
                                                   கவிதை  அதனை  நுகரும்  திறனுடையவர்கட்கு  என்றும்  புதுமையின்பம் நல்க வல்லது.
அஃது'அறிதோறும்  அறியாமை  கண்டற்றால்'கவிதை,மனத்தின்  உயர்ந்த நிலையில் இருந்து  பிறந்த்து.மனமோ அளந்தறிய  முடியாத  ஆழம் உடையது.உளவியல் அறிஞர்களும்  அதன்  எல்லையை அளந்தறிய முடியாது  திகைக்கின்றனர்.மனத்தை  அறிய,அறிய அது  மென்மேலும்  ஆர்வம்  ஊட்ட வல்லது.அத்தகைய  மனத்தின்  உயர் எல்லையிலிருந்து  தோன்றிய  கவிதை  என்றும்  வளஞ் சுரந்து  இன்பம்  நல்க வல்லது.கவிதையைப் படிக்கப் படிக்க அஃது  இன்பத்தின் பரப்பையும்,துன்பத்தின்  ஆழத்தையும்  மென்மேலும்  விளக்க வல்ல  அரிய  ஆற்றலைக்  கொண்டது.
                                       ''நவில் தொறும்  நூல் நயம்  போலும் பயில்தொறும்
                                        பண்புடை  யாளர்   தொடர்பு''
என்று  வள்ளுவப் பெருமான்  குறித்த நயம் கவிதைக்கே  உரியது.இது  கருதியே  பாரதியும்
                                       ''பாட்டுத்  திறத்தாலே-இவ்வையத்தைப்
                                         பாலித்திட  வேணும்''
என்றார்.கவிதையைப்  படிப்போர்''அறிந்து  கொண்டோம்''என்று  அதனை  ஒதுக்கும்  நிலை  ஏற்படுவதில்லை.இதனால் தான்  கவிதை  இலக்கியம்  பற்பல  நூற்றாண்டுகள்  நிலைத்து  வாழ்கிறது.கற்பவர்களும்  தலைமுறை,தலைமுறையாக  அதனைத்  திரும்பத் திரும்பக்  கற்றுப்  புதுமையின்பம்   எய்துகின்றனர்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

உட்பாட்டு நிலையும்,உளச் செயலும்

சில  உட்பாட்டு  நிலைகள் உளச் செயலைத்  துரிதப்படுத்தும்;சில நிலைகள் அதனை மெதுவாக  நடை பெறவும் செய்துவிடும்.உற்சாகமான உட்பாட்டு நிலைக்கும் ,சோர்வான உட்பாட்டு நிலைக்கும் ஒருவரது உடல் நலம் காரணமாகலாம்;ஆனால்,அவை அதிகமாக ஒரு குறிக்கோளை  அடைவதில்  பெறும் வெற்றி அல்லது  தோல்வியைச் சார்ந்து நிற்கின்றன.ஒருவர்  கவிதைகளைப் படிப்பது ,சுவைப்பது  இத்தகைய உட்பாட்டு நிலையை ஓரளவு  பொறுத்துள்ளது  எனலாம்.

                                           ஹிப்போகிரேட்டஸ்  என்ற யவன அறிஞர்  நமது  உடலுக்குள்ளே  சில நீர்ப்பொருள்கள்  மிக்கிருப்பது  காரணமாக  மனநிலையும்  மாறும் என  இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூறியுள்ளார்.இந்தக் கொள்கை  நம் நாட்டு அகத்தியர்,தேரையர்  முதலியோர்  கருத்துக்கும் ஒத்து இருக்க  காண்கிறோம்.ஒவ்வொருவருக்கும்  பலப்பல  பண்புகள்  இருப்பினும்  அவற்றுள் ஒரு சிலவே  மேலோங்கித் தோன்றும்.ஒருவர் கவிதையைச் சுவைப்பது ஓரளவு இப்பண்புகளைப் பொறுத்திருக்கின்றது.
                                                               பல உள்ளக்கிளர்ச்சிகளின்  சேர்க்கையே பற்றாக  (sentiment)மாறுகின்றது  என்று  உளவியலார்  கூறுகின்றனர்.ஒரு குறிப்பிட்ட மனிதர் அல்லது பொருள்  மீது  நமது உள்ளக் கிளர்ச்சிகள் திரண்டு அமையும் பொழுது  பற்று உண்டாகிறது.இந்த உள்ளக் கிளர்ச்சிகளின் சேர்க்கை நாட்டுப் பற்றைக்  குறிக்கின்றது.
                                                     செந்தமிழ்  நாடெனும்  போதினிலே  இன்பத்
                                                     தேன் வந்து  பாயுது   காதினிலே-எங்கள்
                                                       தந்தையர்  நாடென்ற  பேச்சினிலே-ஒரு
                                                       சக்தி பிறக்குது   மூச்சினிலே
இது போன்றே  மொழிப் பற்றை அடிப்படையாக  கொண்டு  பல பாடல்கள்  அமைந்துள்ளன.
                                     யாமறிந்த  மொழிகளிலே  தமிழ் மொழி போல்
                                     இனிதாவது  எங்கும்  காணோம்
என்பன  போன்றவை  மொழிப் பற்றை  அடிப்படையாக  கொண்டு எழுந்தவை.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

கவிதையனுபவம்

கவிதையனுபவத்திற்கு  உணர்ச்சியும்,உள்ளக்கிளர்ச்சிகளும்  மிகவும்  இன்றியமையாதவை.கவிதையை இயற்றிய கவிஞனின்  உணர்ச்சி,அதில் வரும்  கற்பனை  மாந்தரின் உணர்ச்சி,அதைப் படிப்போரின் உணர்ச்சி  ஆகிய  மூன்றும்  ஒன்றும் பொழுதே  கவிதையனுபவம் ஏற்படுகிறது.இங்ஙனமே உள்ளக் கிளர்ச்சிகளால்  ஏற்படும் மனநிலைகள்,மீப்பண்பு ,பற்றுக்கள்  போன்றவை  பல்வேறு கவிதைகளை விரும்பிப் படித்துத் துய்க்க  காரணமாகின்றன.
                                             உணர்ச்சிப் பெருக்கால் பூரித்திருக்கும் பிறரைக்  காணும் பொழுது  நம்மிடமும்  அதே உணர்ச்சி  எழுதல்  இயற்கை.மகிழ்ச்சிப் பெருக்கில்  திளைத்திருக்கும்  நண்பர்கள்  மகிழ்ச்சியையும்,மன வருத்தம் கொண்டவர்கள்  நம்மிடம் துக்கத்தையும்  தொற்றிவிடுவர்.கிளர்ச்சி பெற்றுள்ள மக்களுள்ள இடத்தில் நம்மிடம் கிளர்ச்சி எழுவதற்கு காரணம் இன்றேனும்  அது நம்மிடம்  எழுகிறது.
                               இராம-சுக்ரீவ நட்பு ஏற்படுங்கால் இருவரும்  உரையாடிய பொழுது  தம்முடைய குறைகளை  பரஸ்பரம் தெரிவித்துக் கொள்கின்றனர்.சுக்ரீவன் தன் குறைகளையெல்லாம்  கூறி  இராமனிடம் சரண்  புகுகின்றான்.அப்பொழுது இராமன் சுக்ரீவனை இரங்கி நோக்கி,
                                             உன்  தனக்குரிய   இன்ப
                                                       து ன்பங்கள்  உள்ள,முன்நாள்
                                             சென்றன  போக,மேல்  வந்
                                                      துறுவன  தீர்ப்பல்;அன்ன
                                             நின்றன,எனக்கும்  நிற்கும்
                                                     நேர்  என  மொழியும்  நேரா,
                                             மற்றினி  உரைப்ப  தென்னே?
                                                        வானிடை,மண்ணில்,நின்னைச்
                                              செற்றவர்  என்னைச்  செற்றார்
                                                          தீயரே  எனினும்,உன்னோடு
                                              உற்றவர்  எனக்கும்  உற்றார்;
                                                         உன்  கிளை  எனது; என் காதல்
                                               சுற்றம்;உன் சுற்றம்;நீ  என்
                                                        இன்னுயிர்த்  துணைவன்
என்று  கூறுகின்றான்.இப் பாடல்களில்  சுக்ரீவனின்  உணர்ச்சியை  இராமன்பெறுவதைக் காணலாம்.
                                                          ஒட்ட உணர்தல் என்ற  உணர்ச்சியே  முருகுணர்ச்சியை  நம்மிடம்  எழுப்பிக் கலைகளைத் துய்ப்பதற்குக்  காரணமாகின்றது  என்று  உளவியலார்  கூறுகின்றனர்.உணர்ச்சி  உண்டாகும்  பொழுது  உடலில்  எந்த வித  மாறுதலும்  உண்டாவதில்லை.உள்ளக் கிளர்ச்சி  உண்டாகும் பொழுது  உடலில் பல வித  மாற்றங்கள்  உண்டாகின்றன.