கவிதையைப் பாடியவரின் உணர்ச்சி அனுபவமும்,அதைப் படிப்பவரின் உணர்ச்சி அனுபவமும் ஏறக்குறைய ஒன்றாகி விட்டால் படிப்பவர் கவிதையை அனுபவிக்கும் தகுதி பெற்று விட்டார் என்று கருதலாம்.கவிஞன் உணர்ந்த அனுபவம் அவன் எழுதிய கவிதையில் பொதிந்துள்ளது.தன் அனுபவத்திற்கு ஓர் அழகிய வடிவம் தந்து அதனைப் பெற வைக்கின்றான் கவிஞன்.
தன் அனுபவத்தை ஒரு செய்தி போல கூறாது அதனையே கவிதை மொழியாகப் பெயர்த்து விடுகின்றான்.கவிஞனின் உணர்ச்சி கவிதையில் சொற்களாகவும்,சொற் பொருளாகவும் ஒலி நயமாகவும் வடிவம் கொண்டுள்ளன.இவற்றைப் பற்றுக் கோடுகளாக கொண்டு படிப்பவர் கவிஞனின் அனுபவத்தைத் திரும்ப பெற வேண்டும்.
'' வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்''
என்ற இராமலிங்க அடிகளின் வாக்கு இதற்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.உள்ளங் கலந்து பாடினால் கவிஞனின் இதயம் படிப்போரின் இதயத்தைத் தொட்டு விடும்.சங்கப் பாடல்களில் உள்ளன போல் சொற்களும்,சொற் பொருளும் புதியனவாக இருந்தால் தொடக்கத்தில் சிறிது தயக்கமும்,தடுமாற்றமும் நேரிடலாம்.அவற்றை அறிந்து இரண்டாம் முறையில் கவிதையைப் படிக்கும் போது கவிஞனின் உணர்ச்சியுடன் ஒன்றி விட முடியும் நிலையும் ஏற்படும்.
கவிதையின் ஒலிநயம் உணர்ச்சியால் அமைந்திருக்கும்.உணர்ச்சியை ஒழுங்கு படுத்த,விளங்குவது.அந்நயம் கவிஞரின் உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்ச்சியிலிருந்து தோன்றியது,படிப்போர் உள்ளத்தில் சுரக்கும் உணர்ச்சியை ஒழுங்கு படுத்தக் கருவியாக இருப்பது.ஆகவே,ஒரு கவிதையைப் படிக்குங்கால் உணர்ச்சி ஒழுங்குபட்டவுடன் ஒலிநயம் படிப்பவர்க்கு இயல்பாகி விடுதல் வேண்டும்.ஒலி நயமும்,உணர்ச்சியும்,தாளமும்,இசையும் போன்றவை.கவிதை 'செவி நுகர் கனி' என்று போற்றப் படுகின்றது.ஆகவே,கவிதையின் ஒலி நயத்தைச் செவி உணருமாறு பாடுதல் வேண்டும்.
தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் அருமை!
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி!
நன்றிகள்!
நன்றி அண்ணாமலை Sir.
பதிலளிநீக்கு