கவிதைக்கு இலக்கணம் காணத் துணிவதை விட ஒரு நல்ல கவிதையை எடுத்துக்காட்டி''இது போலிருப்பது தான் கவிதை''!என்று கூறுவது எளிது ;பொருத்தமானதுங் கூட.
அழகின்பத்தை அனுபவித்த பாரதி,
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்-எங்கள்
இறைவா!இறைவா!இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்குச்
சேரும் ஐம்பூதமதில் வியனுலகு அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்
ஆகப் பலப்பலநல் அழகுகள் சமைத்தாய்
என்று கூறிக் களிக்கிறான்.
கவிதை என்பது காணும் பொருள்களை வருணிப்பதில் இல்லை.அப் பொருள்களைக் காணுங்கால் அவனுடம் எழும் மனநிலையில் தான் உள்ளது.அந்த மனநிலைக்கு ஒரு வடிவம் கொடுத்து அழகிய சொற்களால் ஓவியமாக அமைப்பதே கவிதையாகும்.அக்கவிதையைப் படிக்கும் நம்மிடத்திலும் அதே மனநிலையை உண்டாக்க வல்லது கவிதை.திருக் குற்றால மலைக்கு நாம் எத்தனையோ முறை போயிருக்கின்றோம்.பல இயற்கைக் காட்சிகளில் ஈடுபட்டுத் திளைத்திருக்கின்றோம்;ஒரு வகையனுபவத்தையும் பெற்றிருக்கின்றோம். குமர குருபர அடிகள் பெற்ற அனுபவம் இது,
சிங்கமும் வெங் களிறுமுடன்
விளையாடும் ஒரு பால்;
சினப் புலியும் மடப்பிணையும்
திளைத்திடும் அங்கொருபால்
வெங்கரடி மரையினொடும்
விளையாடும் ஒருபால்;
விட அரவும் மட மயிலும்
விருந்தயரும் ஒரு பால்.
இருப்பதை விட இருக்க வேண்டியதைக் கூறுகின்றார்.அவர் காணும் காட்சியினை நாம் காணும் பொழுது எல்லையற்ற இன்பத்தைத் துய்க்கிறோம்.
குற்றாலத்தில் தங்கும் பொழுதெல்லாம் தேனருவியைப் பார்க்கின்றோம்.அதன் திரைகள் வானின் வழி ஒழுகுகின்ற வண்ணக் காட்சியையும் காண்கின்றோம்.கவிஞர் அதைக் காணும் விதம்
தேனருவித் திரையெழும்பி
வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும்
தேர்க் காலும் வழுகும்
இயற்கையின் இன்ப ஊற்றாக கவிதை திகழ்கிறது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக