செவ்வாய், 28 டிசம்பர், 2010

பாவும்,பண்பும்

தமிழ்க் கவிதைகளில் பெரும்பான்மையானவை பயிலும்போது இன்பம் தருவதுடன் உள்ளத்தைத் திருத்தும் பண்பையும் பெற்றிருப்பதால்,அவை படிப்போரின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதாக உள்ளன.
                                              காவியங்கள் உண்மைகளை உணர்த்துபவை.கவிஞன் காட்டும் வாழ்க்கையும் ,குறிக்கோள் தன்மையுடையதே.வாழ்க்கை எவ்விதம் அமைந்தால்  நலம் என்று  கவிஞன் கருதுகிறானோ,அங்ஙனமே அக்குறிக்கோளையும் ஆக்குகிறான்.அதற்கேற்றவாறு கவிதைகளையும் தொடுக்கின்றான்.நம் நாட்டுக் காவியங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே  எழுந்தவை.
                                  'நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம்' தமிழில் தோன்றிய தலை சிறந்த கவிதைகளில் ஒன்று.சிலம்பு காரணமாக எழுந்த அக்கதையை உலகோர் புகழும் பெருங்காப்பிய வடிவில் இளங்கோவடிகள் ஆக்கித் தந்துள்ளார்.மூன்று பெரு நீதிகளை அடிப்படையாகக் கொண்டு நூல் இயங்குகிறது.
                            ''அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதும்
                              உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
                              ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்
                             சூழ்வினைச் சிலம்பு  காரண   மாகச்
                             சிலப்பதிகாரம்  என்னும் பெயரால்
                             நாட்டுதும்  யாமோர்  பாட்டுடைச் செய்யுள்''
                                           வாழ்க்கையின்  உயர்ந்த  அடிப்படை  உணர்ச்சிகளாக     உள்ள  அன்பு,வீரம்,காதல்,தியாகம் போன்ற பண்புகள் அமைந்துஅவற்றின் வாயிலாக உயிர்கள்  எல்லாவற்றுடனும் இயைந்து உணரும் விழுமிய அனுபவம் பெறத்தக்கதாக விளங்கினால் தான்  கவிதை சிறந்த ,நிலைத்த இன்பம் தருவதாகின்றது.இந்த விழுமிய உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த கவிதைதான் பெருங்கவிதை என்ற நிலையையும் அடைகின்றது.
கவிஞன் இவற்றையெல்லாம் மனதில் கொண்டு கவிதையைப் படைக்க முடியாது.அப்படிப் படைக்க முயன்றாலும் அக்கவிதை தான் விரும்பியபடி அமையாது.
                                  ஆனால்,தான் பெற்ற  விழுமிய  உணர்ச்சியை-அனுபவத்தை-பிறரும்  பெற வேண்டும்  என்ற நோக்கம் மட்டிலும் கவிஞனிடம் இருந்தால்,
கவிதை தானாக கவிஞனின் விருப்பம் போல் நன்கு அமைந்து விடும்.தமிழ்க் கவிதைகள் பெரும்பாலும் அறங் கூறும் இயல்பும்,கவிதை இயல்பும் கொண்டே திகழ்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக